மேற்கு திசை காற்றில் ஏற்பட்டுள்ள வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு பரவலாக மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மிதமான மழையும், நீலகிரி, சேலம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக பல்வேறு மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. பகல் நேரங்களில் வெயில் அதிகமாக இருந்தாலும், மாலை மற்றும் இரவு நேரங்களில் பெய்யும் மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.
வானிலை ஆய்வு மையம்
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் நாமக்கல் ஆகிய 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அடுத்த 3 மணி நேரத்திற்கான முன்னறிவிப்பு
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள முன்னறிவிப்பின்படி, இன்று காலை 10 மணி முதல் அடுத்த 3 மணி நேரத்திற்கு தமிழகத்தின் 12 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை, வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35 செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 செல்சியஸாகவும் பதிவாக வாய்ப்புள்ளது.
டெல்டா மாவட்டங்களில் தீவிரமடையும் மழை
பிரபல வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்திரன் தனது எக்ஸ் தளத்தில், காவிரி டெல்டா மாவட்டங்களில் மழை தீவிரமடைந்துள்ளதாக கூறியுள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம், கொரடாச்சேரி, மன்னார்குடி பகுதிகளிலும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் தலைஞாயிறு, கோடியக்கரை சுற்றுவட்டாரங்களிலும், தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம், ஆடுதுறை, நாச்சியார்கோவில் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது.
ஏற்கனவே பாதிக்கப்பட்ட பகுதிகள்
விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி, சிங்கவரம் போன்ற பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. செஞ்சி நான்கு முனை சந்திப்பில் கழிவுநீருடன் மழைநீர் கலந்ததால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். இதேபோல், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலையில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து மெதுவாக நகர்ந்தது. இப்பகுதியில் முறையான வடிகால் வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர். தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். குறிப்பாக, கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் மக்கள் ஆற்றங்கரையோரங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளுக்கு செல்வதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் படிக்க: தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய குட் நியூஸ்! தீபாவளி போனஸ் அறிவிப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் – @ZEETamilNews
ட்விட்டர் – @ZeeTamilNews
டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ