பெங்களூரு மக்கள்தொகை எத்தனை கோடி? இன்னும் 6 வருஷத்தில் பெருசா மாறப் போகுது! – bengaluru population increase to 1.5 cr by 2031 with diverse job market

Date:

- Advertisement -


கர்நாடகா மாநிலத்தின் தலைநகர் பெங்களூருவில் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் அதிக அளவில் குடிபெயர்ந்து வருகின்றனர். இந்நிலையில் வரும் 2031ஆம் ஆண்டு மக்கள்தொகை தொடர்பாக ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.

Bengaluru Population Increase 2031
Bengaluru Population Increase 2031(புகைப்படங்கள்– Samayam Tamil)
இந்தியாவின் ஐடி தலைநகரம் என்று அழைக்கப்படும் பெங்களூருவில் வேலைவாய்ப்பு தேடி வெளிமாநில மக்கள் இடம்பெயர்ந்து வருகின்றனர். இங்கு கட்டிட கூலி வேலை முதல் ஒயிட் காலர் ஜாப் வரை ஏராளமான வாய்ப்புகள் கொட்டி கிடக்கின்றன. இதனால் பெங்களூருவில் இட நெருக்கடி அதிகரித்து வருகிறது. இந்நகரம் புறநகர் பகுதிகளில் படிப்படியாக விரிவடைந்து வருகிறது. 2021ஆம் ஆண்டு பெங்களூருவின் மக்கள்தொகை 1.2 கோடியாக இருந்த நிலையில், வரும் 2031ஆம் ஆண்டு 1.5 கோடியாக அதிகரிக்கும் என்று DES எனப்படும் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் இயக்குநரகம் நடத்திய ஆய்வு முடிவுகளில் தெரிய வந்துள்ளது.

பெங்களூருவில் வேகமாக அதிகரிக்கும் மக்கள்தொகை

குறிப்பாக 2025 மற்றும் 2026 ஆகிய ஆண்டுகளுக்கு இடையிலான காலகட்டத்தில் மட்டும் 1.93 சதவீத அளவிற்கு மக்கள்தொகை அதிகரிக்கக் கூடும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த கர்நாடகாவையும் எடுத்துக் கொண்டால் 18.2 சதவீதத்தில் இருந்து 20.7 சதவீதமாக அதிகரிக்கும் என்று கூறுகின்றனர். கர்நாடகா மாநிலத்தின் நகர்ப்புற பங்களிப்பை எடுத்து கொண்டால் மக்கள்தொகையானது 43.9 சதவீதத்தில் இருந்து 47.8 சதவீதமாக அதிகரிக்கக் கூடும்.

புலம்பெயர் தொழிலாளர்கள் குடியேற்றம்

பெங்களூருவை பொறுத்தவரை புலம்பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. எனவே இவர்களின் வசதிக்கேற்ப உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் பெங்களூரு நகருக்கு உள்ளேயே போதிய திட்டமிடல்கள் இன்றி மக்கள் தவித்து வருவதாக சொல்லப்படுகிறது. அப்படியிருக்க புறநகர் பகுதிகளில் நிலைமை மோசமாக இருப்பதாக குற்றம்சாட்டுகின்றனர்.

நகர்ப்புற திட்டமிடல்களில் அதிக கவனம்

இதுபற்றி ஜெயின் பல்கலைக்கழக ஆலோசகர் டாக்டர் எஸ்.மாதேஸ்வரன் கூறுகையில், பெங்களூருவின் நகர செயல்திட்டங்கள் அனைத்தும் மிகவும் பழமையானவை. இதில் புதிதாக பிரிக்கப்பட்ட மண்டலங்கள், புறநகர் பகுதிகள் உள்ளிட்டவற்றுக்கான திட்டங்கள் எதுவும் இல்லை. எனவே நிர்வாக ரீதியில் சில குறைபாடுகள் இருக்கின்றன. அவற்றை விரைவாக சரிசெய்ய வேண்டியுள்ளது.

உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல்

பொதுமக்களுக்கு கல்வி, சுகாதாரம், உள்கட்டமைப்பு வசதிகள் ஆகியவை மிகவும் அடிப்படையான விஷயங்களாக பார்க்கப்படுகின்றன. உதாரணமாக சொல்ல வேண்டுமெனில் 50 ஆயிரம் பேருக்கு ஒரு ஆரம்ப சுகாதார மையம் தேவைப்படுகிறது. இதற்கேற்ப கிரேட்டர் பெங்களூரு ஆணையம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சரியான திட்டங்களை உருவாக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்த விஷயத்தில் அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் செயல்பாடுகளை முடுக்கி விட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மக்கள்தொகை கட்டுப்பாட்டுக்கு கல்வி விழிப்புணர்வு தேவை !

பெங்களூருவில் அதிகரித்து வரும் மக்கள்தொகையால் ஏற்படும் சிக்கல்கள் என்னென்ன?

  • போக்குவரத்து நெரிசல், வீடுகள் பற்றாக்குறை, பொதுப் போக்குவரத்து வசதிகளை பூர்த்தி செய்ய முடியாத நிலை உண்டாகும்.
  • நகரின் நீர், நிலம், காற்று மாசுபாடு வேகமாக அதிகரிக்கும்.
  • நீர்நிலைகளில் கழிவுநீர் கலக்கும் நிலை அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் மக்கள்தொகை அதிகரிப்பு என்பது கழிவுகள் வெளியேற்றத்தை அதிகப்படுத்தும். நிலத்தடி நீர் மட்டத்தை குறைக்க வாய்ப்புள்ளது.
  • அதேசமயம் ரியல் எஸ்டேட் துறையில் புதிய வாய்ப்புகளை உருவாக்கி தரும். புதிய முதலீடுகளை கொண்டு வந்து சேர்க்கும்.
  • புலம்பெயர் தொழிலாளர்கள் போதிய சுகாதாரமற்ற சூழலில் வசித்து வருகின்றனர். இந்த நிலை மேலும் மோசமாகலாம்.
  • எனவே ஒருங்கிணைந்த மற்றும் நிலையான நகர்ப்புற திட்டமிடல் உருவாக்கத்தின் முக்கியத்துவம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
மகேஷ் பாபு

ஆசிரியர் பற்றிமகேஷ் பாபுமகேஷ்பாபு சமயம் தமிழ் இணையதளத்தில் அசிஸ்டெண்ட் நியூஸ் எடிட்டராக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 11 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். News 7 Tamil செய்தி தொலைக்காட்சியில் 2014ஆம் ஆண்டு சப் எடிட்டராக பணியை தொடங்கினார். மாநில, மாவட்ட அளவிலான செய்திப் பிரிவில் செய்திகள் வழங்கி வந்தார். தினசரி மாலை ”வணக்கம் தமிழ்நாடு” செய்தி தொகுப்பை தயாரித்து வழங்கினார். 2016ஆம் ஆண்டு சமயம் தமிழ் செய்தி இணையதளத்தில் காப்பி எடிட்டராக பணியில் சேர்ந்தார். தமிழக, தேசிய நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை அளித்து வந்தார். பின்னர் மாவட்ட செய்திகள் பிரிவின் பொறுப்பாளராக பணியாற்றினார். அப்போது பல்வேறு மாவட்டங்களில் நிகழும் அரசியல், வளர்ச்சி திட்டங்கள், பொதுமக்கள் குறைகள் தொடர்பான செய்திகளை வழங்கி வந்தார். இதையடுத்து சீனியர் கன்டென்ட் புரொடியூசராக அரசியல் செய்திகள், பகுப்பாய்வு கட்டுரைகள், அரசு திட்டங்கள் தொடர்பான செய்திகளை எழுதி வந்தார். பெங்களூரு உள்கட்டமைப்பு வசதிகள் தொடர்பான செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து எழுதக் கூடியவர். மேலும் மாநில அளவில் அரசு மற்றும் தனியார் துறைகளின் புதிய வசதிகள் தொடர்பாக எழுதி வருகிறார். தற்போது சமயம் தமிழ் செய்தி ஊடகத்தில் அசிஸ்டெண்ட் நியூஸ் எடிட்டராக அரசியல், வளர்ச்சி திட்டங்கள், சமூகப் பிரச்சினைகள் தொடர்பான செய்திகளை எழுதி வருகிறார்.… மேலும் படிக்க